நடிகரும், தவெக தலைவருமான விஜய் கட்சி தொடங்கியது முதலே சினிமாத்துறையில் பலர் வரவேற்பும், நேர்மறையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர் விஜய் அவர்களை விமர்சனம் செய்து தங்களது இமேஜை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் அதற்கெல்லாம் விஜய் ஒரு பொழுதும் அந்த விமர்சனங்களை எதிர்த்தும், அதற்கு பதலளித்தும் ஒரு பதிவு கூட செய்வதில்லை.
இதை வாய்ப்பாக பயன்படுத்தி பலரும் தொடர் விமர்சனங்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் பட இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்த் பல நேர்காணலிலும், அவரது எக்ஸ் தளத்திலும் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பல கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட ஒரு பதிவில் நடிகர் விஜய்க்கு பதிலாக விஜய் விஜய் சேதுபதி அரசியலுக்கு வரலாம் என கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “நடிகர்களில் விஜய் சேதுபதி அரசியலுக்கு வரலாம். அவர் வளைகுடா நாடுகளில் அடிமட்டப் பணிகள் செய்தவர். இயல்பு வாழ்க்கை வாழ்ந்தவர். நட்பு, எதிர்ப்பு, முதலாளி, தொழிலாளி, தொலைதூரத்தில் குடும்பத்திற்காக உழைப்பு என பலவித அனுபவங்களை நேரடியாகச் சுவைத்துப் பண்பட்டச் சாமானியர். இப்படிப் பலரைச் சொல்லலாம். இவர்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வரலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

