கருப்பு : சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் `கருப்பு’. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து தற்போது திரையரங்குளில் கலக்கி வருகிறது.
மேலும், வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை ஒவ்வொரு ஊரிலும் சென்று பார்த்து ப்ரோமோஷன் செய்யும் வேலையை நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி தற்போது துவங்கியுள்ளார். அதன்படி, சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸில் படம் பார்க்க சென்ற போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் அவர் கூறிய போது, “கோயம்புத்தூர், திருச்சி, மதுரை இப்போது திருநெல்வேலி என ஒவ்வொரு இடத்திலும் பார்க்கும் ஒரு விஷயம் என்ன என்றால், அபரிமிதமான அன்பு. நேற்று மதுரையில் ஒரு திரையரங்கில் இரவுக் காட்சி பார்த்தேன். அது தியேட்டர் மாதிரியே இல்லை மாறாக ஒரு திருவிழா போல இருந்தது.
மேலும் , என்னிடம் ஒரு முக்கியமான மூத்த விநியோகஸ்தர் ஒருவர் கூறினார். ரொம்ப வருடம் கழித்து தியேட்டர் உள்ளே இப்படி பார்க்கிறோம். படம் வசூல் செய்வது நல்ல விஷயம், ஆனால் மக்கள் உட்கார்ந்து படம் பார்க்காமல் நின்று கொண்டே பார்த்தனர். எனக்கு கடவுள் மேல் உறுதியான நம்பிக்கை உள்ளது. நம்மை மற்றவர்கள் நம்பாமல் இருக்கலாம், ஆனால், முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும்.
மக்களுக்கு இந்தப் படம் மிகவும் உறுதியாக பிடிக்கும் என நம்பினேன் ஒரு நாள் தள்ளிப்போன போது மிக வருத்தமாக இருந்தது. ஆனால், வெளியாகும் போது பெரிய வரவேற்பை பெரும் என நம்பினேன். இப்போது அது நடக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், கருப்பு படத்தின் பார்ட் 2 கண்டிப்பாக வரும். இன்னும் கதையை எழுதவில்லை, அதை எழுத வேண்டும்.” என கூறினார்.






